
சென்னை: ""நீதிபதியாக ஆற்ற வேண்டிய கடமை, பொறுப்பை நிறைவேற்றினேன்; இதில், எனக்கு முழு திருப்தி,'' என்கிறார், நீதி நாயகம் கே.சந்துரு.சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 2001, 2004ம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டும், 2006ம் ஆண்டு தான், சந்துரு நியமிக்கப்பட்டார். அப்போது, வழக்கறிஞர் தொழிலில், மிகவும் "பிசி'யாக இருந்தார். "நீதிபதி, நீதியரசர்' என்கிற வார்த்தைகளை விட, "நீதி நாயகம்' என்பது தான், அவருக்கு பிடித்துள்ளது. போலீஸ் பாதுகாப்பு, செங்கோல் ஏந்திய ஊழியர், "மை லார்டு' என அழைப்பது போன்ற, நீதிபதிக்கு உரிய சம்பிரதாயங்கள், தனக்கு தேவையில்லை என, ஒதுக்கியவர் இவர். தன்னை ஊக்கப்படுத்தும், வழிகாட்டும், காரணிகளாக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி கிருஷ்ணய்யர், மறைந்த நீதிபதி சத்யதேவ் ஆகியோரை, நினைவு கூர்கிறார். "நீதிபதி வாய்ப்பு வரும் போது, மறுக்கக் கூடாது' என, அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறுகிறார். நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, சட்ட இதழில் வெளியாகி உள்ளன. தீர்ப்பாயத்தில் பதவி வந்தும், வேண்டாம் என மறுத்து விட்டார். சட்ட ஆலோசனை வழங்குவது, சட்டப் புத்தகங்கள், "எடிட்' செய்வது, எழுதுவது என, வருங்காலத்தை செலவிடப் போகிறார். இவரது தீர்ப்புகளில், சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை, பகுத்தறிவு அம்சங்கள் அடங்கியிருக்கும். மதுரை, தத்தநேரியில் உள்ள சுடுகாட்டில், ஒரு பிரிவினருக்கு ஒதுக்கிய இடம், ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, நீதிபதி சந்துரு விசாரித்தார்.அந்த தீர்ப்பில், "சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா, சமரசம் உலாவும் இடமே' என்ற பழைய சினிமா பாடலை நினைவு கூர்ந்துள்ளார். "ஜாதி, சமூகம் என்ற பெயரில், தனித்தனி சுடுகாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அனைவருக்கும் பொதுவான சுடுகாடு வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார். உசிலம்பட்டி அருகே, நல்லுதேவன்பட்டியில், துர்கை அம்மனுக்கு, பூஜை செய்து வந்தவர், இறந்து விட்டார். அவரது மகள் பின்னியக்காள், பூஜை காரியங்களை தொடர்ந்தார். இதற்கு, கிராமத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னியக்காள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, "கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு, எந்த தடையும் இல்லை; வழிபடும் கடவுள், "அம்மன்' ஆக இருக்கும் போது, பெண் ஒருவர் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது, வேடிக்கையாக உள்ளது' என கூறியுள்ளார். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என, உத்தரவிட்டார்; இந்த உத்தரவை பின்பற்றி, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஏழு மாவட்டங்கள் வழியாக, விளை நிலங்களின் கீழ், எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை எதிர்த்த வழக்கில், "விவசாயிகளை அழைத்து பேசுங்கள்; தமிழகத்தில் நந்திகிராமம், சிங்கூர் பிரச்னையை உருவாக்கி விடாதீர்கள்' என, எச்சரித்தார்.முன்கூட்டி செய்தி வெளியிட, ஒரு இதழுக்கு தடை கோரி, மத்திய அமைச்சராக இருந்த ராஜா தாக்கல் செய்த மனுவை, விசாரித்த அவர், "பொதுப் பணியில் இருப்பவரின், நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளும் உரிமை, பொது மக்களுக்கு உள்ளது. பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதற்கு முன், தடை விதிக்க முடியாது. ஒரு செய்தி, கட்டுரையை, முழு அளவில் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும். விமர்சனங்களை தடுக்கும் முயற்சியானது, "சென்சார்' செய்வது போன்றதாகும்' என, கூறியுள்ளார். மேடை நாடங்களுக்கு, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற தேவையில்லை; பஞ்சமி நிலங்களை, வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது; மாற்று திறனாளிகளின் குறைகளை தீர்க்க, போக்குவரத்து கழங்களில் தனிக் குழு; தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்; டாஸ்மாக் ஊழியர்களுக்கு, மே தினத்தில், சம்பளத்துடன் கூடிய விடுமுறை என, பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஏ.பி.ஷா. அவர் இல்லை என்றால், தான் நீதிபதியாக ஆகியிருக்க முடியாது என்கிறார் நீதிபதி சந்துரு.இந்த இருவர் அடங்கிய, "பெஞ்ச்' பிறப்பித்த சில உத்தரவுகள்: விதிமுறைகளை மீறிய கட்டடங்களை வரன்முறை செய்வதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது; திருப்பூர் சாயப்பட்டறைகள் வழக்கில், நொய்யல் விவசாயிகளுக்கு, சாயப்பட்டறை உரிமையாளர்கள் நஷ்டஈடு கொடுக்கும் வகையில், அபராதம் விதித்தது; நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய, கண்காணிப்புக் குழு, ஆகியவை முக்கியமானவை.இவரது, 80, மாத பதவி காலத்தில், 96 ஆயிரம், மனுக்கள் மீது உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ""நீதிபதி பணி பற்றி, நன்கு தெரிந்து தான், அதை ஏற்றுக் கொண்டேன்; என் பணியில், முழு திருப்தி அடைகிறேன்,'' என்கிறார், நீதிபதி சந்துரு. "ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் சார்பில் அளிக்கப்படும் பிரிவு உபசார நிகழ்ச்சி, எனக்கு வேண்டாம்' என, தலைமை நீதிபதிக்கு, கடிதம் அனுப்பி விட்டார். தனது வழிகாட்டியாக கருதும் நீதிபதி சத்யதேவ், ஓய்வு பெறும் போது, எந்த கோர்ட் ஹாலில் அமர்ந்து, வழக்குகளை விசாரித்தாரோ, அதே கோர்ட் ஹாலில் தான், நீதிபதி சந்துருவும், வழக்குகளை விசாரித்தார். அங்கிருந்து தான், இன்று ஓய்வு பெறுகிறார்.